மதுரை பாண்டியர்களின் முடிவு
அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1311 ல் தென்னகம் மீது படைகொண்டுவந்து மதுரையை இருபகுதிகளை ஆண்ட பாண்டிய அரசர்களான வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இருவரையும் வென்றார். மதுரை சுல்தானிய ஆட்சியை தொடங்கிவைத்தார். 1377ல் விஜயநகர மன்னர் குமாரகம்பண உடையார் மதுரையைக் கைப்பற்றி சுல்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
அனால் பாண்டிய அரசவம்சம் முடிவுக்கு வரவில்லை. நாயக்கர் அரசின் அரசப்பிரதிநிதிகளின்கீழ் பாண்டிய அரசகுடியினரே மதுரையின் ஆட்சியாளர்களாக இருந்தனர். மதுரையை ஆண்ட இறுதி பாண்டிய அரசர் வீரபராக்ரமபாண்டியன் என்பவர்தான். இக்காலகட்டத்தின் வரலாறு உதிரிச் செய்திகளாகவே கிடைக்கிறது. முழுமையாக இன்னமும் எழுதப்படவில்லை.
லக்கண நாயக்கரால் தோற்கடிக்கப்பட வீரபராக்ரம பாண்டியன் அன்று சேரநாட்டின் பகுதியாக இருந்த தென்காசியை தலைநகராகக் கொண்டு சிறு அரசு ஒன்றை அமைத்தார். பாண்டிய அரசகுடியில் எஞ்சியவர்கள் ஐவர் கயத்தாற்றை தலைமையாகக் கொண்டு ஆண்டனர். தென்காசிப்பாண்டியர்களும் கயத்தாறு பாண்டியர்களும் 1529ல் விஸ்வநாதநாயக்கர் நேரடியாக மதுரைஅரசப்பொறுப்பை ஏற்று மதுரை நாயக்கர் அரசமரபை உருவாக்குவது வரை நீடித்தனர்.
விஸ்வநாத நாயக்கரின் அமைச்சரான அரியநாத முதலியார் கயத்தாறை ஆண்ட பஞ்சவழுதிகள் என்னும் பாண்டியர்களை தோற்கடித்து முற்றாக அழித்தார். தென்காசிப்பாண்டியர்களும் அவரால் அழிக்கப்பட்டனர். தென்காசி பாண்டிய வம்சத்தின் இறுதி இளவரசியை கொல்லம் அரசர் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு பாண்டிய அரசகுடி முடிவுக்கு வந்தது.
Comments
Post a Comment